இறுதியாக.. உடலுறவு இரகசியங்கள்‌

 


இறுதியாக.. 



உடலுறவு இரகசியங்கள்‌ 



கணவனையும்‌ மனைவியையும்‌ ஒருவருக்கொருவர்‌ ஆடைகளாக அல்லாஹ்‌ ஆக்கியுள்ளான்‌: அவன்‌ கூறுகிறான்‌:



நோன்புகால இரவுகளில்‌ உங்களுடைய மனைவிகளுடன்‌ உடலுறவு கொள்வது உங்களுக்கு ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. அவர்கள்‌ உங்களுக்கு ஆடைகளாவர்‌. நீங்கள்‌ அவர்களுக்கு ஆடைகளாவீர்‌... (குர்‌ஆன்‌ 2:187)



ஓர்‌ ஆடை நீளமாகவும்‌, முழுமையாகவும்‌, தாராளமாகவும்‌ இல்லாவிட்டாலோ, ஓட்டைகளும்‌ கிழிசல்களுமாய்‌ இருந்தாலோ அது மானத்தை மறைக்கத்‌ தகுதியானதல்ல என்பதை நாம்‌ அறிவோம்‌.


அதேபோல்‌, தம்பதியரும்‌ ஒருவருக்கொருவர்‌ ஆடைகளாவர்‌. அவர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ இரகசியம்‌ காக்கத்‌ தவறினால்‌, தங்களின்‌ கடமை நிறைவேற்றத்தில்‌ தவறுகிறார்கள்‌ என்று பொருள்‌. தாம்பத்திய உறவு என்பதே வாக்குறுதி, நம்பிக்கை மற்றும்‌ இரகசியத்தின்‌அடிப்படையில்‌ அமைந்துள்ளது. எனவே, இந்த வாக்குறுதி மற்றும்‌ நம்பிக்கையின்‌ அடிப்படையில்‌ துணைவர்‌ வெளிப்படுத்தும்‌ இரகசியங்‌களை மறைத்துவைப்பது தம்பதியர்‌ இருவரின்‌ மீதும்‌ கடமையாகும்‌.



பாலுறவு விஷயங்களில்‌ இரகசியம்‌ பேணுதல்‌ அதிக முக்கியத்துவம்‌ பெற்றது. கணவனும்‌ மனைவியும்‌ தங்கள்‌ பாலுறவு இரகசியங்களைப்‌ பிறரிடம்‌ வெளிப்படுத்துவது திட்டவட்டமாகத்‌ தடைசெய்யப்‌பட்டுள்ளது (ஹராம்‌) அது அல்லாஹ்வின்‌ தூதரால்‌ அழுத்தம்‌ திருத்தமாகக்‌ கண்டித்துரைக்கப்பட்டதொரு மானங்கெட்ட, விலக்கப்பட்ட செயலாகும்‌.



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூ சயீத்‌ அல்‌-குத்ரி (ரழி) அறிவிக்கிறார்‌:



தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வின்‌ பார்வையில்‌ மனிதர்களிலேயே மிகக்‌ கொடியவர்‌ யாரெனில்‌, அந்த மனிதர் தம்‌ மனைவியுடன்‌ உடலுறவு கொண்டு அவளும்‌ அவருடன்‌ உடலுறவுகொண்டுவிட்ட பின்‌ அவளின்‌ இரகசியத்தை வெளிப்படுத்துபவர்‌. (சஹீஹ்‌ முஸ்னிம்‌ 1437)



பாலுறவு இரகசியங்களை வெளிப்படுத்துவுதற்கு எதிரான எச்சரிக்கை ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும்‌ பொருந்தும்‌. படுக்கை அறையில்‌ நடப்பதைப்‌ பிறருடன்‌ கலந்துரையாடுவது விலக்கப்பட்டது. பாலுறவு விவகாரங்கள்‌ தனிப்பட்ட விஷயங்கள்‌. எனவே, அவற்றை அதே அந்தஸ்தில்‌ வைத்துக்‌ காக்கவேண்டும்‌. அவற்றைப்‌ பிறரிடம்‌ பகிர்ந்துகொள்வதால்‌, அவர்களுடைய மனதுக்குள்‌ எண்ணங்கள்‌ பல உருவாகி, இதயத்தின்‌ விபச்சாரத்திற்கு வழிவகுக்கும்‌ சாத்தியம்‌ உள்ளது. மேலும்‌, அது துணைவருக்குக்‌ கேடு விளைவிக்கும்‌ ஒரு வழியுமாகும்‌. ஏனெனில்‌, அவர்‌ அல்லது அவள்‌ தங்களின்‌ பாலியல்‌ நடத்தை விவரங்களைப்‌ பிறரிடம்‌ வெளிப்படுத்துவதை விரும்பமாட்டார்‌.



அஸ்மா பின்த்‌ யஸீது (ரழி) அறிவிக்கிறார்‌:


தாங்கள்‌ ஆண்களும்‌ பெண்களுமாக அல்லாஹ்வின்‌ தூதருடைய சமூகத்தில்‌ அமர்ந்திருந்தோம்‌. அப்போது அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறினார்கள்‌:


'ஓர்‌ ஆண்‌ தனக்கும்‌ தன்‌ மனைவிக்கும்‌ இடையில்‌ நடக்கும்‌ விஷயத்தைப்‌ (பிறரிடம்‌) பேசுவாரா? மற்றும்‌, ஒரு பெண்‌ தன்‌ கணவனுடன்‌ ஈடுபடும்‌ விஷயத்தைப்‌ (பிறரிடம்‌) பேசுவாரா?” மக்கள்‌ அமைதியாக இருந்தனர்‌. பதில்‌ எதுவும்‌ கூறவில்லை. எனவே, நான்‌ கூறினேன்‌, 'ஆம்‌, அல்லாஹ்வின்‌ தூதரே! அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக, ஆண்களும்‌ இதைச்‌ செய்கின்றனர்‌. பெண்களும்‌ இதைச்‌ செய்கின்றனர்‌. ' அதற்கு அவர்கள்‌ கூறினார்கள்‌: அவ்வாறு செய்யாதீர்‌. ஏனெனில்‌, அதற்கான உவமை, ஓர்‌ ஆண்‌ ஷைத்தான்‌ ஒரு பெண்‌ ஷைத்தானை சாலையின்‌ நடுவில்‌ சந்திப்பது போன்றது. அங்கே மக்கள்‌ பார்த்துக்கொண்டிருக்க அவன்‌ அவளுடன்‌ உடலுறவு கொள்‌கிறான்‌.' (தபரானியின்‌ அல்‌-முஃஜம்‌ அல்‌-கபீர்‌ 24:162-163. இதையொத்த அறிவிப்புகள்‌ சுனன்‌ அபூ தாவூத்‌ மற்றும்‌ முஸ்னத்‌ அஹ்மதில்‌ பதிவுசெய்யப்‌பட்டுள்ளன)



தங்கள்‌ உடலுறவுச்‌ சந்திப்புகள்‌ குறித்து நண்பர்களிடம்‌ வர்ணனை அளிக்கும்‌ போக்கு சிலரிடம்‌ உள்ளது. சில ஆண்கள்‌, படுக்கையில்‌ தங்களுடைய செயல்திறன்‌ குறித்தும்‌ தங்கள்‌ மனைவிகள்‌ தங்களிடம்‌ ஈடுபடும்‌ விஷயங்கள்‌ குறித்தும்‌ தம்பட்டம்‌ அடித்துக்கொள்வார்கள்‌.



இதே போல்‌, சில பெண்கள்‌ தங்கள்‌ கணவன்களுடனான உடலுறவு குறித்து பெருமை பேசிக்கொள்வதில்‌ மகிழ்ந்து இளைப்பார்கள்‌. இதுபோன்றவர்களைக்‌ கட்டுப்படுத்துவதற்கு மேற்கூறிய நபிமொழி போதுமானவை. அவர்கள்‌ தீர்ப்பு நாளன்று அல்லாஹ்விடம்‌ பதில்‌ அளிக்கவேண்டும்‌ என்பதை உணர்ந்து, இதுபோன்ற வெட்கங்கெட்ட நடத்தைகளை முற்றிலும்‌ ஒதுக்கி தள்ளிவிட வேண்டும்‌.



பாலுறவு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கான இந்தத்‌ தடை, வழக்கமான சூழ்நிலைகளுக்கே கூறப்பட்டுள்ளது. எனினும்‌, ஒருவர்‌ தம்‌ தாம்பத்திய விவகாரங்களைக்‌ கலந்தாலோசிக்க வேண்டிய


உண்மையான தேவை இருப்பின்‌ - உதாரணமாக, மார்க்க வழி காட்டுதல்‌ அல்லது ஆலோசனை கேட்கும்பொழுது; அல்லது, ஒருவா்‌ அநீதியால்‌ பாதிக்கப்பட்டு, அதிகாரத்தில்‌ உள்ளவர்களிடம்‌ புகார்‌ அளிக்கும்பொழுது - இந்தத்‌ தடைக்கு தற்காலிக விலக்கு உண்டு. ஆயினும்‌, இதிலும்கூட, கூறத்‌ தேவையில்லாத வர்ணனைகளை வெளிப்படுத்துவது கூடாது. (காண்க: அல்‌-மின்ஹாஜ்‌ ஷரஹ்‌ சஹீஹ்‌


மூஸ்லிம்‌, ஹதீஸ்‌ எண்‌: 1437இன்‌ விரிவுரை)




முற்றும்


அல்லாஹு அஃலம்


Comments