ஆண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய இரு விஷயங்கள் :
முதலாவதாக, உடலுறவு கோரும் கணவனின் உரிமை என்பதற்குப் பொருள், அவர் தம் இச்சையைத் தணித்துக்கொள்ளத் தம் மனைவியை வன்செயலால் கட்டாயப்படுத்தலாம் என்பதல்ல. கணவன் "கோப நிலையில் உறங்குவது", "அதிருப்தி கொள்வது" பற்றி ஹதீஸ்களில் (நபிமொழியில்) கூறப்படுவதிலிருந்து, கணவன் அவளுடன் பலவந்தமாக இணைவதிலிருந்தும், அவளைப் புண்படுத்துவதிலிருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விஷயம் தெளிவுபடுகிறது.
அதுபோன்ற செயல் நியாயமாக இருப்பின், நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை கணவனுக்கு அனுமதித்திருப்பார்கள். இஸ்லாத்தின் கொள்கைகளில் பொதுவான சட்டம்; மார்க்க விஷயத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. இதுதான் சட்டம் என்று எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறது. அதை பின்பற்றுதல் அல்லது பின்பற்றாமல் இருத்தல் என்பதை அவரவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறது. அதே வேளையில் சட்டத்தைப் பின்பற்றும்போது நற்கூலியும், சட்டத்தை மறுக்கும்போது தண்டனையும் நிச்சயம் உண்டு என்பதையும் இஸ்லாம் தெளிவாக எடுத்துச்சொல்கிறது.
இரண்டாவதாக, மனைவி தன்னை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சாதாரண இயல்புநிலைகளில் பொருந்தும். இஸ்லாமியச் சட்டங்கள் (ஷரீஆ) விதித்த இடர்களோ, தகுந்த காரணமோ இருக்கும் நிலையில் அது பொருந்தாது. மனைவி தன் சுயவுரிமைகளை விட்டுத்தர வேண்டியநிலை இல்லாதவரை, அவள் தன் கணவனுக்குப் பணிய கடமைப்பட்டிருக்கிறாள். எனவே, இதுபற்றிய பல்வேறு ஹதீஸ்கள், தங்கள் கணவன்மார்களுக்கு எதிராக உடலுறவை ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண்களுக்கே ஓர் எச்சரிக்கையாகும். எனினும் மாதவிடாயில் இருந்தால் அல்லது பேறுகால ரத்தப்போக்கு கொண்டிருந்தால் அல்லது நோயுற்றிருந்தால் அல்லது உடல்ரீதியாக உடலுறவு கொள்ள இயலாமல் இருந்தால். அல்லது களைப்புற்று, உணர்வெழுச்சி குன்றியிருந்தால்
அல்லது உடலுறவுச் செயல்பாடு அவளின் நலனைப் பாதிக்கக்கூடியதாய் இருந்தால், தன் கணவனின் உடலுறவுக்கோருதலுக்கு அவள் இணங்கவேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, அவள் உடலுறவுக்கொள்ள இயலாமல் இருப்பதை கணவன் புரிந்துகொண்டு அவள்மீது அனுதாபம் காட்ட வேண்டும். எனினும், வெறுமனே "அதற்கான மனநிலையும் விருப்பமும் இல்லை" என்பது பெண்களின் நியாயப்பாடாக அமையாது.
அல்லாஹ் கூறுகின்றான்;
"எந்தவொரு ஆன்மாவின் மீதும் அது தாங்கவியலாத் சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை." (அல்குர்ஆன் 2:286)
மனைவி கடும் நோயுற்று, உடலுறவுகொள்ள சக்திபெறாத நிலையில் இருப்பதைப் பொருட்படுத்தாது, தன் பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்யுமாறு கணவன் மனைவியிடம் கோரும் பல உதாரணங்களை நாம் காண்கிறோம். சிலர், மணவிலக்கு செய்துவிடுவதாகக்கூட மனைவிமார்களை மிரட்டுகின்றனர். தங்களின் இந்த நடத்தைக்கு மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர்! மனைவி உடலுறவில் ஈடுபடும் நிலையில் இல்லாது, அதற்காக ஓர் உண்மையான மற்றும் இஸ்லாமிய ரீதியாகத் தகுந்த காரணம் இருக்கும்பட்சத்தில், கணவன் மனைவியை நிர்பந்தித்தால், அவர் பாவம் செய்தவராகிறார். பெண்களும் மனிதப் பிறவிகளே; விரும்பும்போதெல்லாம் "ஆன்", ஆஃப்" செய்துகொள்ள அவள் இயந்ந்திரம் அல்ல என்பதையும் முஸ்லிம் கணவன்மார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அறுதியாக, இந்த விவகாரங்களை மிகச் சிறந்தமுறையில் தீர்ப்பதற்கான வழிகளும் உண்டு. அவை; ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல், மதிப்பு மரியாதை, அன்பு, பண்பு, பரிவு, துணைவருக்குத் தன்னைவிட முன்னிடம் அளிப்பது ஆகியவையே.
"நீங்கள் உங்களுக்கு விரும்புவதையே மற்றவர்களுக்கும் விரும்பாதவரை (உன்மையான) இறை நம்பிக்கையாளராக முடியாது" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை (நூல்: முஸ்லிம் 45) நினைவில் கொள்ள வேண்டும். இந்த கருத்தாக்கம் தாம்பத்யத்தில் மென்மேலும் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
Comments
Post a Comment