முத்தத்தைக் கொண்டு முன்விளையாட்டை துவங்குங்கள் :

 


முத்தத்தைக் கொண்டு முன்விளையாட்டை துவங்குங்கள் : 



முன்விளையாட்டின் துவக்கம் முத்தமாக இருக்கட்டும். ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது முன்விளையாட்டின் மிகவும் அவசியமானதும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியுமாகும்.



அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "உங்களில் எவரும் மிருகத்தைப் போன்று தன் மனைவியை அணுகக்கூடாது. அவர்களுக்கு இடையில் தூது அனுப்புதல் வேண்டும். "அல்லாஹ்வின் தூதரே! (இங்கே) தூது என்பது யாது?" என வினவப்பட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முத்தமும், இன்சொற்களும் (கொண்ட முன்விளையாட்டு) என பதிலளித்தார்கள்." (ஆதாரம்: இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இத் ஹாஃப் அல்-ஸாதாத் அல்-முத்த்கீன் பிஷரஹ் இஹ்யா உலூம் அல்-தீன் 6:175)



அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிரார்கள்: "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், "நான் ஆயிஷாவிடம் 'அது நீங்களாகத்தான் இருக்கும்?' என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:." (ஆதாரம் ஸுனன் திர்மிதீ 86, ஸுனன் அபூதாவூத் 181, சுன்பன் அந் நஸாஈ 170)


இந்த ஹதீஸிலிருந்து, ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது விரும்பத்தக்கது என விளங்குகிறது. மேலும் அது, ஒருவர் தம் வீட்டிற்கு வரும்போதும், வெளியே போகும்போதும் தம் மனைவியை முத்தமிடுவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இது அல்லாஹ்வின் அன்புத் தூதரின் வழிமுறையாகும்.



இங்கே, இல்லறத்தம்பதிகளிடம் நாம் ஒரு வினா எழுப்ப வேண்டிய அவசியமிருக்கிறது. உங்களில் எத்தனைப் பேர் வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது தனது துணைக்கு முத்தமிட்டுச் செல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள்? புதிதாக திருமணமான சில காலங்களுக்கு கணவன் வீட்டைவிட்டு வெளியில் புறப்படும்போது கதவருகில் எவரும் பக்கத்தில் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவசர அவசரமாக முத்தமிட்டு விடைபெறும் இந்த வழக்கம் மிகவும் சுவையானதுதான், இல்லறத்தின் சுவையை இன்னும் கூட்டக்கூடியதுதான். ஆனால் வெளியில் செல்வதற்கு முன்னும், வீட்டிற்கு வந்த பின்னும் தனது துணைக்கு முத்தமிடுவது சுன்னத்தான ஒரு செயல் என்பது நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்?! இதுவும்கூட நபிவழிதான் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டுவிட்டீர்களா? அல்ஹம்துலில்லாஹ்.



இந்த IN - OUT முத்தமிடும் சுன்னத்தை தம்பதிகள் ஃபாலோ பண்ணிக்கொண்டு வருவார்களானால் "தலாக்" தலைதெறிக்க ஓடாதா...! நபிவழி எனும்போது நன்மையைப்பற்றிக் கேட்பானேன். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? கரும்பு தின்னக்கூட கூலி கொடுக்கின்ற மார்க்கம் தான் இஸ்லாம். இல்வாழ்க்கையை இன்பமயமாக்கும் அத்தனை விஷயங்களுக்கும் இஸ்லாம் இனிதாக வழி காட்டுவதைக் கண்டு பூரித்துப்போகிறீர்களா? ஆம்! இவையனைத்தும் இறைவன் வழங்கியிருக்கும் அனுமதியெனும்போது; தம்பதியர்கள் தங்களுக்குள் இன்பத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிய அல்லாஹ்வுக்கு அதிகமதிகமாக நன்றி செலுத்தக் கடமைபட்டுள்ளார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கரும்பு தின்பதற்கும் கூலி அந்த வாய்ப்பை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது அதற்கும் அதிகமதிகமான கூலி... ஸுப்ஹானல்லாஹ். எவ்வளவு அற்புதமான மார்க்கத்தை அந்த ஏக இறைவன் மனித வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறான்! நன்றி செலுத்துவோம் நன்றி செலுத்துவோம், அந்த அருளாளனுக்கு நன்றி செலுத்துவோம்! கரும்பாக இனிக்கும் விஷயங்களைத் தொடர்வோம்....


Comments