மனைவியின் உரிமைகள் :
ஆணைப்போல், பெண்ணுக்கும் பாலியல் தேவைகள் உண்டு. எனினும், ஆணைப்போலல்லாமல், பெண் தன் பாலியல் வேட்கையின்மீது கூடுதல் கட்டுப்பாடு கொண்டவள். இந்த வித்தியாசம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவும் உடல், உணர்வெழுச்சி மற்றும் உள்ளூர இயல்புணர்ச்சி ரீதியான வேறுபாடுகளினால் தோன்றுகிறது.
பொதுவாக, பெண் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றும்படி கேட்கமாட்டாள். மாறாக, அவளுக்கு இச்சை ஏற்படும்போது, தன் கணவனை வசீகரிப்பதற்காகு பல்வேறு உத்திகளைக் கையாளுவாள். தன்னை அலங்கரித்துக்கொள்ளுதல், ஆசையைத்தூண்டும் வகையில் கணவனிடம் பேசுதல், ஏக்கத்துடன் கணவரைப்பார்த்தல் முதலியன. மாதவிடாய் சுழற்சி முடிந்ததும் பெண்ணின் பாலுறவு விருப்பம் மிகுந்திருக்கும். என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்து. புரிந்துகொள்ளும் கணவன் இதை உணர்ந்து, தன் மனைவியின் சமிக்ஞைகளை உணர்ந்து செயல்படுவான்.
கணவன், தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது மார்க்கக்கடமையாகும். ஒரு தகுந்த காரணமோ அனுமதியோ இன்றி, மனைவியின் இந்த உரிமையை கணவன் நிறைவேற்றத் தவறினால் அவர் பாவம் செய்தவராவார். எனவேதான் கணவன் தன் மனைவியுடன் சிறிது காலத்திற்கு ஒருமுறை (அடிக்கடி) உடலுறவு கொள்ள வேண்டும் எனப் பல சட்டவியலார்கள் கருதுகின்றனர்.
கணவன் தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவளுடன் எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு கொள்வது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்துவேற்பாடு உள்ளது.
இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்கள் கருத்தில், ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு இரவுகளுக்கு ஒருமுறையாவது உடலுறவு கொள்ளவது மார்க்கக்கடமை என்று கூறப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கு பின்வரும் சம்பவம் ஆதாரமாக அமைகிறது.
கதாவும் ஷஅபியும் அறிவிப்பதாக அப்துர் ரஸ்ஸாக் தம்முடைய அல்-முஸாஃபில் கூறுகிறார்;
"ஒரு பெண்மணி ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "என் கணவர் இரவில் நின்று வணங்குகிறார், பகலில் நோன்பு நோற்கிறார்" என்றாள். ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "நீர் உம் கணவரை மிகச் சிறப்பாகப் போற்றியிருக்கிறாய்" என்றார்கள். அதற்கு கஅப் இப்னு சவ்வார் அவர்கள், ''அவள் (அசலில்) புகார் செய்கிறாள்'' என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார். "எப்படி?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.
"அவள் தன் கணவரிடமிருந்து திருமணப் பங்கை பெறுவதில்லை எனக் கோருகிறாள் (அதாவது தன்னுடைய உரிமைகளை அவளது கணவன் நிறைவேற்றுவதில்லை)" என்றார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "இந்த அளவுக்கு நீர் புரிந்திருந்தால் நீரே அவளுக்கு தீர்ப்பு கூறவும்" என்றார்கள். அப்போது அவர் (கஅப் இப்னு சவ்வார் கூறினார்; "அமீருல் முஃமினீன் அவர்களே! நான்கு மனைவிகளைத் திருமணம் செய்ய அல்லாஹ் அனுமதித்துள்ளான். எனவே நான்கு பகல்களில் ஒரு பகலும், நான்கு இரவுகளில் ஓர் இரவும் அவளுக்கு உரிமையுண்டு.." (நூல்: ஸுயூத்தி, தாரிக் அல்-குல்ஃபா - பக்கம் 161)
இதன் அடிப்படையில், நான்கு இரவுகளில் ஒருமுறை ஒரு கணவன் தன் மனைவியின் பாலுணர்வுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்களின் கருத்து. ஏனெனில், அவருக்கு நான்கு மனைவிகள் இருப்பின், அவர் மற்ற மூன்று இரவுகளை தன்னுடைய மற்ற மனைவிகளுடன் கழிப்பதற்கு அனுமதி உண்டு.
இமாம் இப்னு ஹஸமின் கருத்தில், ஒரு மனிதர் மாதத்தில் ஒருமுறையேனும் தன் மனைவியுடன் படுக்கையில் கூடுவது மார்க்கக்கடமை. அண்ணாரின் கூற்றுப்படி; மாதவிடாய்களுக்கு இடையே ஒருமுறையாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது கடமை. இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இதற்கு அவர்கள் எடுக்கும் ஆதாரம்; திருமறையின் வாசகம். "எனினும், அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அவர்களை அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இடத்திலிருந்து அணுகுங்கள்: என்பதாகும். (நூல்: அல்-முஹல்லா, பக்கம் 1672)
"அவர்களை அணுகுங்கள்" என்ற அல்லாஹ்வின் சொற்களிலிருந்து இப்னு ஹஸம் தமது கருத்தைப் பெற்று, இது கடமையைக் குறிக்கும் ஒரு கட்டளை என்கிறார்கள். ஆனால் அறிஞர்கள் பலர் இதை, மாதவிடாய்க்குப்பின் உடலுறவை அனுமதிக்கும் வாசகமாகாவே கருதுகின்றனர்.
அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி, ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு மாதங்களில் ஒருமுறையேனும் கட்டாயம் உடலுறவு கொள்ளவேண்டும், இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இவர்கள் தங்களின் நிலைப்பாட்டிற்குப் பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பு :
இப்னு ஜரீர் அறிவிக்கிறார்; "நான் நம்பும் ஒருவர் இந்தத் தகவலை என்னிடம் கூறினார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோந்து வரும்பொழுது, ஒரு பெண் இவ்வாறு கூறுவதை (கவிதை பாடுவதை) செவியுற்றார்கள்.
"இரவு நீண்டு செல்கிறதே! இருள் சூழ்ந்துள்ளதே!
(ஆனால்) என்னுடன் நெருங்கியிருக்க தோழன் இல்லையே. என் உறக்கம் தொலைந்ததே! தனக்கு இணையில்லாத அல்லாஹ்வின் அச்சம் மட்டும் இல்லையெனில் இந்தப் படுக்கையின் இருபக்கங்கள் அங்குமிங்கும் நகர்ந்திருக்குமே!" (அதாவது இறையச்சம் மட்டும் அப்பெண்மணியை தடுத்திருக்காவிட்டால் அவள் வழிதவறிப்போயிருப்பாள் என்பதைக் கூறுகின்றது கவிதையின் இறுதி வாசகம்).
உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள், "உமக்கு என்ன நேர்ந்தது?"
அதற்கு அவள்: "நீங்கள் தான் என் கணவரை சில மாதங்களுக்குமுன் போருக்கு அனுப்பிவிட்டீர்களே! இங்கே நான் அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்" என்றாள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்; "உமக்கு தவறிழைக்கும் எண்ணம் இருக்கிறதா?"
அதற்கு அவள்; "அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்" என்றாள். உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; "அப்படியென்றால் நீர் உம்மைக் கட்டுப்படுத்திக்கொள். அவருக்கு (கணவருக்கு) வெறும் ஒரு செய்தியை அனுப்பினாலே போதும். விஷயம் தீர்ந்துவிடும்" என்றார்கள்.
பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை - அப்பெண்ணின் கணவரை (திரும்ப வருமாறு) கட்டளையிட்டு செய்தி அனுப்பினார்கள். அதன்பின் தன் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் சென்று கேட்டார்கள்; "என் விஷயம் சம்பந்தப்பட்ட ஒன்றை நான் உன்னிடம் கேட்க விரும்புகின்றேன். அதற்கு தீர்வு கூறவும். ஒரு பெண் தன் கணவன் இன்றி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?"
அவர் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) வெட்கத்தில் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ் உண்மையானா விஷயத்தில் வெட்கம் கொள்வதில்லை" என்றார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆகையால், அவர்கள் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) தன் கையால் சைகை காட்டினார்கள் - மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் என. எனவே, நான்கு மாதங்களுக்கு மேலாக (எவரும்) ராணுவப் பணியில் அமர்த்தப்படக் கூடாது என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.'' (நூல்: தாரீஃக் அல்-குல்ஃபா. பக்கம் 161,162)
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இக்கேள்வியை தம் மனைவியிடம் கேட்காமல், தம் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
எனினும், கணவனுக்காகான உடலுறவு உரிமை போலவே, தன் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நிபந்தனை உண்டு,.
அவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் அளவிற்கு உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும்.
கணவன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால்,
அல்லது உடலுறவில் ஈடுபட இயலாத அளவு பலவீனமாக இருந்தால், அல்லது தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் விளைவாக தாங்கவியலாத பலவீனம் ஏற்படுமானால், அவர் தம் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அதனால் பாவியாகவுமாட்டார்.`
எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு? ஒரு தம்பதியர் எத்தனை நாளுக்கு ஒருமுறை அல்லது பலமுறை உடலுறவில் ஈடுபடலாம் என்பதைப்பற்றி ஒரு குறிப்பிட்ட அளவையோ வரைமுறையையோ ஷரீஅத் நிர்ணயம் செய்ய்யவில்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் இயல்புணர்ச்சி, உடல்வாகு, பாலுணர்வு ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, தங்களுக்கு மிகப் பொருத்தமான அளவை தம்பதிகளே ஒருவருக்கொருவர் முடிவுசெய்துகொள்ள வேண்டியதுதான்.
Comments
Post a Comment