உடலுறவு - தம்பதியர் இருவருக்குமான உரிமை
பாலியல் திருப்தி என்பது கணவன், மனைவி இருவருக்கும் உள்ள உரிமை. இது கணவனுக்கு மட்டுமே உள்ளது என நினைத்துக்கொள்வது தவறாகும். கணவனின் அளவுக்கு மனைவிக்கும் தன் பாலியல் தேவைகளின் நிறைவை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. துல்லியமாக சொல்ல வெண்டுமானால், உடலுறவு என்பது தம்பதியர் இருவருக்குமான உரிமையாகும். ஒருவர் தம் துணைவியரின் பாலியல் பசியைத் தணிப்பது உடலுறவின், இன்னும் சொல்லப்போனால் மணவாழ்விற்கும்கூட சட்ட ஏற்புக்குரிய வழிமுறையாகும்.
இனி, உடலுறவில் கணவனின் உரிமை என்ன? மனைவியின் உரிமை என்ன? என்பதைப் பார்ப்போம்.
கணவனின் உரிமை :
ஓர் ஆண் உடலுறவுக்கு விரும்பும்போதெல்லாம் அவர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள உரிமை பெற்றுள்ளார். அவருக்காக தன்னை தயாராக வைத்துக்கொள்வது மனைவியின் மார்க்கக்கடமையில் ஒன்றாகும். நியாயமான காரணமின்றி இதில் தவறவிடுவது பாவச்செயலாகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
"ஓர் ஆண் தன் மனைவியைத் தன் படுக்கைக்கு அழைத்து அவள் வர மறுத்துவிட்டால், அவர் கோபமான நிலையில் தூங்குவார் எனில், காலைப்பொழுது வரை வானவார்கள் அவளை சபிக்கின்றனர். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி, 3065 முஸ்லிம் 1436) இங்கு முஸ்லிமில் உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன.
திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றோர் ஹதீஸ்; "எவன் கைகளில் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒருவர் தன் மனைவியைத் தன் படுக்கையின்பால் அழைத்து அவள் மறுத்துவிட்டால், அவளுடைய கணவன் அவள் மீது திருப்தியுறும்வரை அல்லாஹ் அவள் மீது கோபம் கொண்டிருக்கிறான். (நூல்: முஸ்லிம் 1436)
இதுகுறித்து இன்னுமோர் நபிமொழி; "ஓர் ஆண் தன் மனைவியைப் பாலியல் தேவை நிறைவேற்றத்துக்காக அழைத்தால், அவள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் (அதை விட்டுவிட்டு) வரவேண்டும். (நூல்: திர்மிதீ 1160)
இவையும் இவை போன்ற பிற நபிமொழிகளில் இருந்தும் உடலுறவுக்கான கணவனின் கோருதலுக்கு மனைவி பணிவதன் முக்கியத்துவம் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இயல்புநிலையில், மனைவி கணவனின் அழைப்பை மறுப்பது கொடிய பாவமாகும். அதைவிட, அவளின் மறுப்பால் கணவன் விலக்கப்பட்ட செயலை (அதாவது வேறொரு பெண்ணை நாடி விபச்சாரம்) செய்துவிட்டால் அது மாபெரும் பாவமாகிவிடும்.
எனவே தகுந்த காரணமின்றி மனைவி தன் கணவனுக்கு உடலுறவை மறுப்பது விலக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும் என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த கருத்தின் அடிப்படையில்தான், பெண்கள் நஃபிலான நோன்பு வைப்பதற்குமுன் தங்கள் கணவன்மார்களிடம் அனுமதி கேட்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள். ஏனெனில், அவள் நோன்பு நோற்றிருக்கும்போது கணவன் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படலாம் அல்லவா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "ஒரு பெண், தன்னுடைய கணவன் அவளுடன் இருக்கும்போது அவருடைய அனுமதியின்றி (நஃபிலான) நோன்பு நோர்க்கக்கூடாது. (நூல்: புகாரி 4896)
Comments
Post a Comment