நோன்பின் இரவில் உடலுறவு கொள்ளலாமா ?

 


நோன்பின் இரவில் உடலுறவு கொள்ளலாமா ? 



நோன்பின் பகலில் தான் உடலுறவு கொள்ளக் கூடாதே தவிர இரவில் தாராளமாக, உடலுறவில் ஈடுபடலாம். சிலர் ரமலான் இரவிலும் கூட உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று கருதி ஒதுங்கியே வாழ்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். இரவில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதற்கு பின்வரும் இறைவசனம் சான்றாகும்.



அல்லாஹ் கூறுகிறான்.



நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குரான் 2:187 )




உடலுறவின் போது பேசலாமா?



உடலுறவில் ஈடுபடும் போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதிகமாக பேச கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்க்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கூறுகின்றனர்.



உடலுறவு கொள்ளும் போது அதிகம் பேசாதிர்கள். பேசினால் ஊமைத் தன்மை (அல்லது) திக்கு வாய் ஏற்படும்.



இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸை இப்னு அசாகிர் அவர்கள் பதிவு செய்து உள்ளார்கள். ஆனால்.!



இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும். இதில் ஸுகைர் இப்னு முஹமது அல்குராசனி என்ற ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர் இடம் பெறுகிறார். எனவே இது நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்டதாகும்.



உடலுறவின் போது பேசுபவர்களே அதிகம். பேசுபவர்கள் ஊமையாகிவிடுவர். திக்குவாய்களாகி விடுவர் என்பது உண்மையானால் ; உலகில் இன்று பலர் அந்த நிலைக்கு வந்து இருக்க வேண்டும். இப்படி ஆகவில்லை என்பதிலிருந்தே இது ஒரு இட்டுகட்டப் பட்ட செய்தியே என்பது தெளிவாகிறது..



மேலும் இமாம் இப்னு ஸீரின்(ரஹ்) (மரணம் ஹிஜ்ரி 110) அவர்களிடம் “உடலுறவின் போது காம இச்சையை வெளிப்படுத்தும் விதமாக பேசலாமா” எனக் கேட்கப்பட்டபோது  “காமமாக பேசிக்கொண்டு ஈடுபடக்கூடிய உடலுறவுதான் அதிக சுகம் தரக்கூடியது” எனப் பதிலளித்தார்கள் (நவாதிர் அல்அய்க் அஸ்ஸுயூத்தி பக்கம் 48)



எனவே உடலுறவின் போது பேசலாம்.. அதிலும் காதல் மொழியிலேயே பேசலாம், தவறேதும் இல்லை.


Comments