உடலுறவுக்கான சிறந்த நேரம் எது?

 


உடலுறவுக்கான சிறந்த நேரம் எது?



பொதுவாக, உடலுறவுச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதான் என்று ஷரீஅத் எதையும் வரையறுக்கவில்லை. தம்பதிகள் உடலுறவு கொள்வதற்கு பகலோ, இரவோ; எந்த நேரத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவு, பகல் எனப் பல்வேறு நேரங்களில் தம் மனைவிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பகமான செய்தியாகும். மேலும், உடலுறவுக்கான தூண்டுதலும், தம்பதியருக்கு போதிய வீரியமும், ஓய்வும் இருந்தாலே உடலுறவுச் செயல்பாடுகள் நடக்கும் என்பதால், உடலுறவுக்கு குறிப்பிட்ட நேரத்தை விதியாகத் திணிப்பது நடைமுறைக்கு ஏற்றதாகாது.



அதே சமயம் அனுபவத்தின் அடிப்படையில் அறிஞர்கள் விரும்பத்தக்க நேரங்கள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். இவை இங்கு ஒரு புரிதலுக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது. கட்டாயமானது என்றோ அல்லது நம்பத்தக்கது என்றோ கருதத்தேவையில்லை.



விரும்பத்தக்க நேரங்கள் : 



உடலுறவுக்கு ஏதுவான நேரம் - ஓய்வாக இருக்கும் வேளை, தம்பதியர் இருவரிடத்திலும் சமமான இயல்புணர்ச்சி நிலவும் வேளை ஓ.கே.! பதற்றம், கவலை அல்லது பசி, தாகம், சோகம், நோய்நொடி போன்றவை இச்சையை குன்றச்செய்துவிடலாம். இதுபோன்ற சமயத்தில் உடலுறவை தவிர்ப்பது நலம்.



சிலருக்கு ஏதுவான நேரம் இரவுதான். அறிஞர்கள் சிலர், இரவின் பிற்பகுதியே உடலுறவுக்கு மிகப் பொருத்தமான நேரம் எனக் கருதுகின்றனர். ஏனெனில், இரவின் முதற்பகுதியில் வயிறு நிறைந்திருக்கும். முழுமையாக உணவு செரிமானம் ஆனபின்பே உடலுறவு கொள்வது மிகப்பொருத்தமாக இடுக்கும். இதுவே அல்லாஹ்வின் தூதருடைய வழக்கமும் கூட! இருப்பினும் மற்ற நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய மனைவிமார்களுடன் உடலுறவு கொண்டுள்ளார்கள்.



அபூ இஸ்ஹாக் அறிவிக்கிறார்கள்; "அல்லாஹ்வின் தூதருடைய (இரவு நேரத்) தொழுகை குறித்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் என்ன கூறினார்கள் என அல்-அஸ்வத் இப்னு யஸீதிடம் கேட்டேன். அதற்கவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறியிருக்கிறார்கள்;


"அவர்கள் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவின் முதல் பகுதியில் உறங்கி, பிற்பகுதியில் (தொழுகைக்காக) எழுந்திரிப்பார்கள். அப்போது அவர்கள் தம் மனைவியுடன் தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாடினால், விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு உறங்கிவிடுவார்கள். தொழுகைக்கான முதல் அழைப்பு கொடுக்கப்பட்டதும் அவர்கள் குதித்தெழுவார்கள். (அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்கள் குளித்தார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறவில்லை. எனினும் அவர்கள் கூறியதை நான் விளங்கிக்கொண்டேன்.) (எனினும்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் இருக்கவில்லை எனில், (வெறுமனே) தொழுகைக்கான உளூ- கைகால் கழுவி தூய்மை செய்துகொண்டு, இரு ரக் அத்துகள் (ஃபஜ்ர் தொழுகையின் ஸுன்னா) தொழுதார்கள் (நூல்: முஸ்லிம் 739)



விஞ்ஞான ரீதியிலும் ''விடியற்காலை உடலுறவு'' ஆரோக்கியமானாதே என்பதை மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். காலை நேர செக்ஸ் நல்ல 'ஐடியா'தான் என்கிறார்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் ஃபிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பாலியல் உணர்ச்சி எழுவது சகஜம்.



எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, பகலாக இருந்தாலும் சரி, மாலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே தம்பதிகளுக்கு சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.



இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது. வெள்ளிக்கிழமை உடலுறவைப்பற்றி சிறப்பித்துக்கூறப்பட்டுள்ளதால் வாரம் ஒருமுறை உடலுறவு போதுமானது என்று முடிவு செய்துகொள்ளாதீர்கள். அவ்வாறு எண்ணுவது தவறு. பொதுவாக உடலுறவுக்கான காலமும் சரி, நேரமும் சரி, எத்தனை முறை என்பது பற்றிய குறிப்புகளும் சரி எதையும் ஷரீ அத் பொருட்படுத்தாத நிலையில் அதை வலியுறுத்தி சொல்வது சரியானதாகாது. தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நேரம், காலம், இடம் இவற்றை உத்தேசித்து தம்பதிகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறது.



பரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு!

ஜனாபத் குளியல் குளிக்கும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் தலைமுடியை நன்றாக கோதிக் கழுவிக் குளிக்கும்போது உடலில் இருந்து தெறித்துவிழும் ஒவ்வொரு துளித் தண்ணீருக்கும் ஒவ்வொரு நூறு நன்மைகள் எழுதப்படாமல் இல்லை. மேலும் அவர்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)



மற்றோர் நபிமொழியில்,



"எவரொருவர் உளூச்செய்து பின்பு (ஜனாபத்) முழுக்கு நீங்கக் குளித்தால் குழைத்த மாவிலிருக்கும் உரோமத்தை எடுப்பது போன்று அவர் பாவங்கள் களையப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)



இந்த இரு நபிமொழிகளைக் காணூம் எவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வதில் வினோதமில்லை. உடலுறவு கொள்வதும் ஒரு வணக்கமே என்பதை முதலிலேயே பார்த்தோம். இப்பொழுதோ உடலுறவுக்குப்பின் தூய்மைப்படுத்திக்கொள்ள குளிக்கும் குளியலுக்குக்கூட இவ்வளவு நன்மை என்று இஸ்லாம் சொல்கிறதே! நினைத்தாலே இனிக்கிறதல்லவா? ஆம்! அதுதான் இஸ்லாத்தின் வசீகரம்.



மனிதா! நீ, தீய வழியில் சென்று உன் இச்சையை தீர்த்துக்கொள்ளாதே! அது உன்னை நரகக்குழியில் தள்ளிவிடும் என்று எச்சரிக்கும் இஸ்லாம், ஆகுமான வழியில் இறைவன் அனுமதித்த வழியில் திருமணம் முடித்துக்கொண்டு மனைவியுடன் உடலுறவு கொண்டு இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது - அதை இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்ட, இறைக்கட்டளைக்கு கண்ணியமளித்த ஒரு செயலாக இறைவன் கருதுவதால் தனது அடியார்களுக்கு கரும்புத் தின்னக்கூட கூலி கொடுக்கின்றான் என்றே அறியமுடிகிறது. இப்பொழுது எண்ணிப்பாருங்கள் அந்த ஏக இறைவன்; தனது படைப்புகளில் உயர்வான மனித இனத்தின்மீது மீது கொண்டிருக்கும் அன்பும் கருணையும்.


உடலுறவில் முழு திருப்தியை பெற்றுக்கொண்ட தம்பதிகளின் நிலை :


உடலுறவில் முழு இன்பத்தையும் திருப்தியையும் பெற்றுக்கொண்ட தம்பதிகளுக்கிடையே சண்டைச் சச்சரவுகள் அதிகமிருக்காது. அவர்களுக்குள் பாசம் பொங்கிவழியும். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமாளித்துக்கொள்வார்கள். காரணம் உடலுறவின்போது அவர்களுக்குள் இருந்த ஈடுபாடு அதாவது தன்னைப்போல் தன் துணையும் முழுமையான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் எனும் எண்ணம்... அந்த நல்லெண்ணம் எல்லா நேரத்திலும் அவர்களிடம் தழைத்தோங்கவே செய்யும். இது திருப்தியான, நிம்மதியான உடலுறவினால் விளைந்த நன்மையல்லவா? இது இவ்வுலகில் நம் கண்முன்னே இறைவன் அவர்களுக்களித்த நற்கூலிதானே! வெறுமனே சொன்னால் எப்படி? அந்த உண்மையான தம்பதிகள் தங்களுடைய இணையின் திருப்திக்கும் முக்கியத்துவம் அளித்து நடந்து கொண்டதால் இறைவன் அவர்களுக்கு அளித்த பரிசுதானே வாழ்க்கையின் மற்ற காரியங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதி.



திருப்தி கிட்டாத தம்பதிகளின் நிலை :


அவ்வாறு இல்லாமல் உடலுறவில் சரியான முறையில் பரிபூரண திருப்தியை கிடைக்கப்பெறாத தம்பதிகளைப் பாருங்கள்... என்ன நடக்கிறது? உடலுறவில் திருப்தி இல்லாத முழுமையான உச்சம் அடையாத எத்தனையோ பெண்கள் நிம்மதியிழந்து.... எல்லா வசதியும் இருந்து மனநோயாளியைப் போல இருப்பார்கள். எதையோ பறிகொடுத்ததுபோல் காட்சியளிப்பார்கள். இல்லற சுகத்தை கணவன் மூலம் முழுமையாக கிடைக்கப்பெறாதவள் தன்னை கணவனுக்காக அலங்கரித்துக்கொள்ள மாட்டாள். எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று சீறிப்பாயும் குணம் கொண்டவளாக இருப்பாள். இதன் பாதிப்பு எதுவரை செல்லும் என்றால், குழந்தைகளை திட்டுவதும், சின்ன சின்ன குற்றத்துக்காக அவர்களை அடிப்பவர்களாகக் காணமுடியும். ''சனியன்களா... இதுகளைப்பெற்றுக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்...? என்று கண்ணீர் வடிப்பாள்.



இப்படி உலகெங்கும் பாலியல் திருப்தி இல்லாமல் பலப்பல அநியாயங்கள், கொடுமைகள், தவறுகள் தினந்தோறும் நடப்பதை கண்முன்னால் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.


ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசையா? :



"ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசை அதிகப்படுத்தப்பட்டுள்ளது, என்றாலும் அவர்களுக்கு அதில் அல்லாஹ் (ஆசையை அடக்கிக்கொள்ள) அவர்கள்மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: கன்ஜுல் உம்மால்)



வெட்கம் எனும் போர்வையை பெண்ணின் மீது போர்த்தி அவளின் 99 மடங்கு இச்சையை மறைத்து வைத்துள்ளான் அல்லாஹ்! இது பெண்ணினத்திற்கே இறைவன் வழங்கிய தனிப்பட்ட பாக்கியமாகும். அந்த தனிப்பட்ட பாக்கியத்தை ஒவ்வொரு கணவனும் புரிந்து நடந்துகொண்டால் அவர்களின் இல்லங்கள் ஒவ்வொன்றுமே பூலோக சொர்க்கம்தான் என்பதை அவர்கள் உணரமுடியும், புரிந்துகொள்ள வேண்டும்.



 மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால்....



இஸ்லாம் பெண்ணினத்தின் இந்த ஆசைக்கு எந்த அளவு உயர்வான மதிப்பளிக்கிறது என்பதற்கு... ''மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால் அவளுக்கு ஆசை அடங்கும்வரை ஊரில் தங்கியிருந்து அவளை முழுமையாக திருப்திபடுத்திவிட்டு அதற்கப்புறமே போருக்குச் செல்ல வேண்டும்'' என்று இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. எனவே மனைவிக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் ஒன்றான உடலுறவு விஷயத்தில் கணவன்மார்கள் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக, தனது மனைவியிடம் உடலுறவு விஷயத்தில் அலட்சியமும், பொடுபோக்கும், வஞ்சகமும் செய்வது மாபெரும் துரோகமாகும்.



எங்களுக்கு வேலைபளு, டென்ஷன், வெளிநாடு சம்பாத்தியம், அது... இது என்று சாக்கு போக்கு சொல்லி எந்த கணவனும் மனைவிக்கு செய்ய வேண்டிய இந்த மாபெரும் பொறுப்பிலிருந்து அல்லாஹ்விடம் தப்பிக்கவே முடியாது.





Comments